இலங்கைப் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை ஒழிப்பதற்கான ஜனாதிபதி காரியாலயம், சிறுவர் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி மற்றும் இலங்கை மன்றம் இணைந்து ஏற்பாடு செய்யும் 2020 நோக்கி நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் ஒக்டோபர் 1ம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தன்று பாதயாத்திரையொன்று ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு -7 இலங்கை மன்ற நிறுவனத்திலிருந்து ஆரம்பிக்கும் நடைபவனி ஆர்ப்பாட்ட ஊர்வலம் அல்ல என சிறுவர் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி அமைப்பின் தலைவர் டொக்டர் துஷ் விக்ரமநாயக்க கூறினார். செப்டம்பர் 1ம் திகதி இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு, மேல், தெற்கு என அனைத்து பகுதிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே, பரங்கியர் உள்ளிட்ட அனைத்து இனத்தினரும் கலந்து கொள்ளவுள்ளார்கள். பாடசாலைகளில் எமது பிள்ளைகளை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் எனக் கோரி மனுவொன்றும், அமைப்பின் மூலம் முன்வைக்கப்பட்ட ஐந்து யோசனைகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அன்று மாலை 4 மணிக்கு கையளிக்கப்படவுள்ளது.

இது குறித்த விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்த டொக்டர் துஷ் விக்ரமநாயக்க, இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் விசேட அம்சங்கள் பல உண்டு. நாம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பிள்ளைகளை இணைத்து இத்திட்டம் பற்றி அறிவுறுத்துகின்றோம். அதே போல் நிபுணர்கள் குழுவினருடன் இணைந்து செயல்படுகின்றோம். அதைத்தவிர ஐந்து அம்ச யோசனை மிக முக்கியமானது. இலங்கை 1991ல் ஐக்கிய நாடுகளில் சிறுவர் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டு அந்த சட்ட திட்டங்களுக்கு உட்படுவதாக உறுதியளித்துள்ளது.

ஆனால், அன்று தொடக்கம் இன்று வரை பல பாராளுமன்ற தேர்தல்கள் இடம்பெற்றன. 4 ஜனாதிபதிகள், 9 பிரதமர்கள் தெரிவு செய்யப்ப ட்டார்கள். ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் வழங்கிய உறுதிமொழியை அதாவது சிறுவர்களுக்கு உடல் ரீதியாக தண்டனை வழங்குவதை நிறுத்த எதுவும் செய்ய முடியாது போயுள்ளது. அதனால் கடந்த பெப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் தொடர்பான அமைப்பால் எமது நாட்டுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவாக இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்கள்.

அதனால், ஐந்து அம்ச யோசனை மிக விசேடமானது. சிறுவர் துன்புறுத்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஐந்து தரப்பினரை இணைத்து நாம் வழங்கும் யோசனைகளும் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைகளும் ஒரே நோக்கில் செயல்படுத்த ஐந்து அம்ச யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன.

பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படுவதைத்தடுக்க சர்வதேச பாடசாலைகள் அனைத்தையும் கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நாம் எதிர்பார்க்கின்றோம். சிறுவர்களுக்கான சட்டம் நாட்டில் வெற்றிபெற வேண்டுமானால் அனைத்து சிறுவர்களுக்கும் அச்சட்டம் உரித்தானதாக இருக்க வேண்டும்.

 

சர்வதேச பாடசாலைகள் கல்வியமைச்சின் ஊடாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் முதலீட்டாளர்களாக பதிவு செய்யப்பட்டிருப்பதால் கல்வி அமைச்சு அனுப்பும் சுற்று நிருபங்களை ஏற்றுக்கொள்வதில்லை என்ற கருத்து நிலவுகின்றது. அதேபோல் பிள்ளைகளை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், பொலிஸ் நிலையங்களில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பயிற்சியளித்து மனதை ஒருவழிப்படுத்தி ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஒழுங்கு முறையொன்றை நாம் அறிமுகம் செய்யவுள்ளோம்.

கீழ் மட்டத்தில் இந்த நிகழ்ச்சித் திட்டத்தைத் தயாரித்து நாடு பூராகவுமுள்ள அனைத்து சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அப்பால் சென்று பாடசாலையிலேயே சிறுவர் பாதுகாப்பு அதிகாரியொருவரை நியமிக்க எதிர்பார்க்கின்றோம். அதன் பிரகாரம் சிறுவர் துன்புறுத்தல் தொடர்பான திட்டமொன்றை பாடசாலை மட்டத்தில் தயாரிக்க ஒத்துழைப்பு வழங்க உள்ளோம். பல வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கையை விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும். அதன் மூலம் அனைத்து சிறுவர்களுக்கும் தேசிய அளவில் பாதுகாப்புக் கிடைக்கும். சிறுவர் தொடர்பான எமது சட்டங்கள் பரஸ்பரம் விரோதமாகவுள்ளது.

குற்றவியல் சட்ட கோவையில் ஒரு பிரிவில் சிறுவர்களை அடிக்க முடியாது. மனதளவிலோ உடலளவிலோ பாதிப்படையச் செய்யக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இன்னொரு பிரிவில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை ஆசிரியர் நல்லெண்ணத்துடன் தண்டித்தால் பிரச்சினை இல்லை எனக் கூறப்படுகின்றது. அப்போது நாம் எவ்வாறு சிறுவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்டுவது. தேசிய அளவில் உடல் ரீதியான துன்புறுத்தலை நிறுத்தியுள்ளோம் எனக் கூறுவது ஐக்கிய நாடுகள் சபை ஒப்பந்தத்தில் எவ்வித சந்தேகமுமின்றி சிறுவர் துன்புறுத்தலை நிறுத்துவோம் என்று கைச்சாத்திட்டுள்ளோம். எமது சட்டத்தில் பிரச்சினை இருக்கும் போது நாம் எவ்வாறு செயல்படுவது,

இறுதியாக நாம் 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பாடசாலைக்கு அனுமதிக்கும் ஒவ்வொரு சிறுவருக்கும் துண்டுப் பிரசுரமொன்றை மும்மொழிகளிலும் வழங்கவுள்ளோம். அதில் இலங்கையில் உங்களை யாரும் அடிக்க, ஏச முடியாது. அவ்வாறு யாரேனும் செய்தால் முறைப்பாடு செய்ய வேண்டியவர்கள், செல்ல வேண்டிய இடம் அனைத்தையும் நாம் அதில் குறிப்பிட்டுள்ளோம். இதன் மூலம் சரீர துன்புறுத்தலின்றி கல்வியைப் பெற்றுக் கொள்வது உறுதி செய்யப்படும். ஆசிரியர்களுக்கும் உத்வேகத்தை அளிக்கும்.

மேலதிக தகவல்களை www.stopchildcruelty.com இணைய தளம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

சமன்மலி பிரியசாந்தி